கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து 198 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோயில் நிலங்களில் நடக்கும் கனிம வள திருட்டைத் தடுக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தேன்கனிக்கோட்டை நாகமங்கலம் அனுமந்தராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கனிமங்களும், பாலேஹூலி பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பதியப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இக்குற்றத்தில் காவல், வருவாய்துறையினருக்கு தொடர்புள்ளதாக கருத வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதி, இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜூலை 26ம் தேதி அறிக்கையுடன் நேரில் ஆஜராக சேலம் சரக டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.