​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“யானை”யை தூக்கனுமுன்னா “அவரு” சப்போர்ட் வேணும்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் சதி ? அஞ்சலையை தட்டி தூக்கியது போலீஸ்

Published : Jul 20, 2024 6:20 AM



“யானை”யை தூக்கனுமுன்னா “அவரு” சப்போர்ட் வேணும்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் சதி ? அஞ்சலையை தட்டி தூக்கியது போலீஸ்

Jul 20, 2024 6:20 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பெண் தாதா அஞ்சலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலர்கொடி மூலம் கொலையாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கிய விவகாரத்தில் , சிறையில் இருந்தபடியே பல சம்பவங்களை செய்து வரும் வடசென்னை ரவுடி ஒருவரின் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள் மலர்கொடி, ஹரிஹரன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு 10க்கும் மேற்பட்ட முன்னணி ரவுடிகள் இணைந்து சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானது. சம்பவத்தன்று மூன்றடுக்கு தாக்குதல் திட்டம் வகுத்து ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாகவும், ஒரு இடத்தில் தப்பினால் அடுத்த இடத்தில் அவரை தாக்கி கொல்ல மேலும் பல ரவுடிகள் காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் காதலியும், பெண் தாதாவுமான அஞ்சலைக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. பொன்னை பாலுவுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கியதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை ஆள் போட்டு கண்காணித்து உளவு சொன்னதும் தெரியவந்த நிலையில் அஞ்சலையை 3 நாட்களாக வலை வீசி தேடிய போலீசார் , அவரை ஓட்டேரியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கைது செய்ததாக அறிவித்தனர்.

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் பல கோணங்களில் விசாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில் சென்னை மற்றும் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டபஞ்சாயத்து என தொழில் பாதிப்புக்குள்ளான ரவுடிகள் பலர் ஒன்றிணைந்து திட்டமிட்டு இந்த கொலையை செய்தார்களா ? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்

ரவுடிகள் வட்டாரத்தில் யானை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தியதில், தற்போது சிறையில் இருந்தே பல சம்பவங்களை செய்து வரும் வட சென்னையை சேர்ந்த ரவுடி மூலம் சிறையில் சதி திட்டம் தீட்டப்பட்டாதா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மலர்கொடிக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்தது யார் ? என்பது குறித்தும், பல ஆண்டுகள் தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் ஹரிஹரனுக்கு யார் மூலம் பணம் கொடுத்து அனுப்பினார் ? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.