திகார் சிறையில் இருந்த ஜாஃபர் சாதிக் சிறை மாற்று வாரண்ட் பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஜாஃபர் சாதிக் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது ஜாஃபரிடம் விசாரிக்க 15 நாள் கஸ்டடி வழங்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு ஜாஃபர் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் ஏதேனும் துன்புறுத்தினரா என்று ஜாஃபரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜாஃபர், சமூகத்தில் முக்கிய நபர்களாக உள்ள 4 பேரை தம்முடன் வழக்கில் இணைக்க அமலாக்கத் துறை முயற்சிப்பதாகவும், அதற்காக அந்த நால்வரின் பெயரை சொல்லி வாக்குமூலம் அளிக்குமாறு அமலாக்கதுறை துன்புறுத்துவதாகவும் கூறினார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி அல்லி, அமலாக்கத்துறை கோரிக்கை குறித்து செவ்வாயன்று தீர்ப்பளிப்பதாகவும், ஜூலை 29 வரை ஜாஃபரை புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.