​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீஸ் காவலில் இருந்த ரவுடி என்கவுன்ட்டர்... ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்

Published : Jul 14, 2024 1:58 PM



போலீஸ் காவலில் இருந்த ரவுடி என்கவுன்ட்டர்... ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்

Jul 14, 2024 1:58 PM

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் புழல் பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்ய இன்று காலை 6 மணியளவில் அங்கு அழைத்துச் சென்றபோது மாதவரம் அருகே போலீசார் பிடியில் இருந்து திருவேங்கடம் தப்பிச்சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடிய நிலையில் காலை 7 மணியளவில் மாதவரம் வெஜிட்டேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் ஒரு தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்த இடத்தை போலீசார் அடைந்தபோது ஏற்கனவே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அவர்களை திருவேங்கடம் சுட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர் சரணடைய மறுத்து கொட்டகையில் துப்பாக்கியை எடுத்து ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதில் போலீசார் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் மீண்டும் திருவேங்கடம் சுட முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்காப்புக்காக முகமது புகாரியும் மற்றொரு பக்கத்தில் இருந்து ஆய்வாளர் சரவணனும் ரவுடி திருவேங்கடத்தை சுட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த திருவேங்கடத்தை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த என்வுண்ட்டர் தாக்குதலில் ரவுடி திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் தோட்டாக்கள் பாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்டிராங் படுகொலையில் திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆம்ஸ்டிராங்கின் ஆதரவாளரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு படுகொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். திருவேங்கடம் மீது 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறினர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ரவுடி பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டபோது சம்பவ இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், வேறு எங்கெல்லாம் ஆயுதங்களை அவர்கள் பதுக்கி வைத்திருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்கவுண்ட்டர் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோரிடம் சம்பவம் குறித்து முகமது புகாரி விளக்கிக் கூறினார்.