பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடுத்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முருகன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், ஃபிரண்ட்ஸ் ஃபாரெவர் ட்ரஸ்ட் என்ற பெயரில் பாலியல் சேவைகளை வழங்கி வருவதாகவும், தம் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீசார் தொல்லை கொடுக்காமல் தடுப்பதோடு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் வழக்கறிஞர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சார மையம் நடத்த பாதுகாப்பு கோருவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்ட ஒன்று என்ற நிலையில், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சில் அடையாள அட்டை வைத்துள்ள ஒருவர், வழக்கறிஞர் என்ற பெயரில் இதுபோன்ற விஷயத்தை செய்து வந்தது துரதிஷ்டவசமானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் வழக்கறிஞர்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணர வேண்டிய தருணம் இது என்றும், இனிவரும் காலங்களிலாவது பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நபர்களின் பின்புலம் மற்றும் அவர்கள் பயின்ற நிறுவனங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.