​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்த “விக்ரம்” பட பாணியில் கணுக்காலை கட் செய்த கொடூரம்.. மேலும் 3 பேரை தூக்கிய போலீஸ்..!

Published : Jul 07, 2024 7:38 AM



ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்த “விக்ரம்” பட பாணியில் கணுக்காலை கட் செய்த கொடூரம்.. மேலும் 3 பேரை தூக்கிய போலீஸ்..!

Jul 07, 2024 7:38 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை வீரர் என்பதாலும், கையில் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பார் என்பதாலும் அவரை வீழ்த்த விக்ரம் பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததாக கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

நாதியற்ற சாதியை தூக்கி திரியாமல் சமத்துவமாக ஆடிப்பாடி கொண்டாடுங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களையும், அரசியல் தலைவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பிணக்கூறாய்வுக்கு பின்னர் எம்பாமிங் செய்து வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருமாவளவன் எம்.பி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பூவைஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

திருமாவளவன் கொலை நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று சம்பவம் எப்படி நடந்தது ? என்று கேட்டறிந்தார்

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 3 மணி நேரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, அவரது மைத்துனர் அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. ஆட்டோ ஓட்டுனர் திருமலை என்பவர் மூலம் ஒரு வாரமாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு, இந்த கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை வீரர் என்பதால், அவரை கொலை செய்ய விக்ரம் பட பாணியில் பதுங்கி இருந்து தாக்கும் திட்டம் வகுத்துள்ளனர். அதன் படி முதலில் தலையின் பின் பக்கம் வெட்டு விழுந்த நிலையில், கொலையாளிகளை சமாளிக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங்கின் வலது கையை வெட்டி துண்டாக்கிய தோடு, அவரது இடது பக்க கணுக்காலையும் வெட்டி அவரை கீழே சாய்த்ததாக கொலையாளிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி வைத்திருந்தால் வெடிகுண்டு வீசும் திட்டத்துடன் கைப்பையில் வெடிகுண்டுகளையும் கொலையாளிகள் கொண்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேருடன் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை பின்னணியில் இருந்து கூலிப்படையை ஏவிய நபர்கள் குறித்தும் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய பகுஜன் சமாஜ் கட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும் , ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி அளிக்காததால் பெரம்பூரில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்டு மனைவி பொற்கொடி நீதிமன்றத்தை நாடி உள்ளார்.