நடிகர் விஜய் கையால் விருது.. உணர்ச்சி வசப்பட்ட மாணவிகள்.. அரசியலுக்கு அழைப்பு விடுத்தார்.. காலை முதல் மாலை வரை கவுரவித்தார்
Published : Jun 28, 2024 10:18 AM
நடிகர் விஜய் கையால் விருது.. உணர்ச்சி வசப்பட்ட மாணவிகள்.. அரசியலுக்கு அழைப்பு விடுத்தார்.. காலை முதல் மாலை வரை கவுரவித்தார்
Jun 28, 2024 10:18 AM
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்தவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசு வழங்கினார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் முதல் 3 மாணவ-மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி 2 வது ஆண்டாக சென்னை திருவான்மியூரில் நடந்தது. கடந்த வருடம் நடிகராக துவங்கிய இப்பணியை , தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் முறையாக விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் வரவழைக்கப்பட்டு விஜயால் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிய விஜய், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதிக மதிப்பெண் பெற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேரில், மாணவிகளுக்கு வைர மூக்குத்தியும் மாணவர்களுக்கு வைர மோதிரமும் வழங்கினார் விஜய்.
மேடையில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் கீழே இறங்கிய உடனேயே அந்த புகைப்படம் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு மதியம் வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
மாணவர்களிடம் அனுமதி பெற்று சிற்றுண்டி சாப்பிட்டு வந்தார் விஜய்.. முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், மருத்துவம், பொறியியல் என்று மட்டுமே கவனம் செலுத்தாமல் கல்வி வல்லுநர்களுடன் கலந்துரையாடி வாய்ப்புள்ள மற்ற துறைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டுமெண்றார்.
இப்போது நமக்கு நல்லத் தலைவர்களின் தேவை உள்ளதாக அரசியல் பேசிய விஜய், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமெனவும், படிக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும் எனத் தெரிவித்தார் விஜய்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆளும் அரசு தவறி விட்டதாக கூறிய விஜய், நமது பாதுகாப்பை நாம் தான் பார்க்க வேண்டும், அரசை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு மாணவர்கள், இளையோரின் சுய அடையாளத்தை அழித்துவிடும் என அறிவுறுத்திய விஜய், "Say No to Temporary Pleasures".. "Say No To Drugs", என மாணவ, மாணவிகளையும் ஒருமித்த குரலில் சொல்ல வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேடையில் விஜயை பார்த்ததும் மாணவிகள் சிலர் அவரது கையோடு சேர்த்து ஹார்ட்டின் போல வைத்தும், காலில் விழுந்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் விஜயின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தும், அவரின் செயலை பாராட்டியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.