14 அரியர்ஸ் வச்சிருக்கியே எப்ப முடிப்ப..? கண்டித்த தாய் - தம்பியை கழுத்தை அறுத்து கொலை செய்து மூட்டை கட்டிய மாணவர்..! திகில் கொலையின் திடுக் பின்னணி
Published : Jun 22, 2024 8:34 PM
14 அரியர்ஸ் வச்சிருக்கியே எப்ப முடிப்ப..? கண்டித்த தாய் - தம்பியை கழுத்தை அறுத்து கொலை செய்து மூட்டை கட்டிய மாணவர்..! திகில் கொலையின் திடுக் பின்னணி
Jun 22, 2024 8:34 PM
சென்னை திருவொற்றியூரில் தாய் மற்றும் சகோதரனை கொலை செய்து சடலங்களை பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வைத்து விட்டு தலைமறைவான மாணவரை போலீசார் கைது செய்தனர்.
படிக்காமல் 14 அரியர்ஸுடன் ஊர் சுற்றிய மாணவரால் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் பத்மா. 45 வயதான இவர் அக்குபஞ்சர் தெரப்பிஸ்டாக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 22 வயதில் நித்தேஷ் , 14 வயதில் சஞ்சய் என இரு மகன்கள் இருந்தனர்.
மூத்த மகன் நித்தேஷ் கல்லூரியில் பிஎஸ்சி டேட்டா அனலிஸ்ட் படித்து வந்தார். இளைய மகன் சஞ்சய் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நித்தேஷ் தனது பெரியம்மா மகளான மகாலட்சுமிக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.
தாங்கள் வீட்டை விட்டு செல்வதாகவும் தனது செல்ஃபோன் மற்றும் வீட்டு சாவியை பையில் போட்டு, தங்கள் வீட்டு வாசலில் வைத்திருப்பதாகவும் கூறி இருந்தார். அதிகாலை எழுந்த மகாலட்சுமி தனது செல்போனை ஆன் செய்த போது நித்தேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்ததார் .
தனது வீட்டு வாசலில் பையில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு தனது சித்தி பத்மா வீட்டிற்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்த போது வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது பிளாஸ்டிக் பையில் சுற்றி மூட்டையாக கட்டப்பட்ட நிலையில், சித்தி பத்மா மற்றும் அவரது இளைய மகன் சஞ்சய் இருவரும் சடலமாக இருப்பதை கண்ட மகாலட்சுமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்
திருவெற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு சடலங்களையும் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மூத்த மகன் நித்தேஷ் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் 14 அரியர் வைத்திருந்ததால், தாய் பத்மா அவரை தொடர்ந்து கண்டித்ததால் இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
தாய் சத்தம் போட்டதால் , கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தேஷ் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பத்மாவின் நண்பர் , நித்தேசை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானம் செய்து வைத்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னரும் தாய் கண்டித்ததால் சம்பவத்தன்று இரவு தனது தாய் மற்றும் சகோதரன் தூங்கிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கழுத்தை அறுத்து கொன்ற நித்தேஷ் , கொலையை மறைக்க இருவரது சடலங்களையும் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரால் சடலத்தை வெளியே தூக்கிச்செல்ல இயலாததால், சடலத்தை அங்கேயே வைத்து விட்டு மாயமான நித்தேஷ் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றதாகவும், தாயையும் சகோதனையும் இரக்கமின்றி கொல்லத்துணிந்த நித்தேஷால் தற்கொலை செய்து கொள்ள மனமின்றி சுற்றிய நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நித்தேசிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.