​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்போம்.. சித்திரை அப்பன் தெருவிலே.. இப்போம்.. சித்திரை தாத்தா ஜெயிலிலே.. மூட நம்பிக்கையால் குழந்தை கொலை..! ஜாதகத்தை நம்பியதால் இனி.. சனிதான்..!

Published : Jun 17, 2024 7:22 PM



அப்போம்.. சித்திரை அப்பன் தெருவிலே.. இப்போம்.. சித்திரை தாத்தா ஜெயிலிலே.. மூட நம்பிக்கையால் குழந்தை கொலை..! ஜாதகத்தை நம்பியதால் இனி.. சனிதான்..!

Jun 17, 2024 7:22 PM

சித்திரையில் பிறந்த பேரக்குழந்தையால் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையால் பச்சிளம் ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்ததாக கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்து 38 நாட்கள் ஆன குழந்தையை கொலையின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா. இவருக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டுகள் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
38 நாள் ஆன ஆண் குழந்தை கடந்த 14 ஆம் தேதி இரவு மாயமானது , தேடி பார்த்த போது அந்தக்குழந்தையை துணியில் சுற்றி யாரோ குளியலறையில் உள்ள தண்ணீர் பேரளுக்குள் போட்டிருப்பது தெரியவந்தது

குழந்தையின் தந்தை பாலமுருகன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் , தாத்தா வீரமுத்து தான் முதலில் குழந்தையை தேட ஆரம்பித்ததாகவும், இறுதியில் குளியல் அறையில் இருந்து சடலமாக கண்டுபிடித்ததாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயம் கொண்டம் காவல்துறையினர் இறந்த குழந்தையை கைப்பற்றி பிணக் கூறாய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு குழந்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி , பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குழந்தை பிறந்ததில் இருந்தே தாத்தா வீரமுத்து கோபத்தில் இருந்தது தெரியவந்தது. வீரமுத்துவை தனியாக அழைத்துச்சென்று விசாரித்த போது குழந்தை இறப்புக்கான மர்மம் விலகியது. சித்திரை அப்பன் தெருவிலே என்ற பழமொழி போல சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தாத்தா உயிருக்கு ஆபத்து என்றும், கடனில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் ஜாதகத்தில் கூறியதால், தனது பேரக் குழந்தையை கொலை செய்ய வீரமுத்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு தனது மகள் தூங்கிய பின்னர் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பேரக்குழந்தை சாத்விக்கை தூக்கிச்சென்றுள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க உடல் முழுவதும் துணியை சுற்றி தண்ணீர் பேரலில் குழந்தையை மூழ்கடித்துக் கொலை செய்து விட்டு குழந்தையை தேடுவது போல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜாதகத்தை நம்பி பேரக்குழந்தையை கொலை செய்ததாக தாத்தா வீரமுத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு , கொலைப்பழியுடன் கம்பி எண்ணி வருகிறார் வீரமுத்து என்று போலீசார் சுட்டிகாட்டுகின்றனர்.