காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் தலைமைக்காவலரை அவரது கணவரே ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான டில்லி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மேகநாதனிடம் இருந்து பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துவருகிறார். இந்த நிலையில், இன்று காலை சாலைத் தெருவில் ஸ்கூட்டியில் பணிக்கு சென்ற டில்லி ராணியை வழிமறித்த மேகநாதன், அவரது வாகனத்தை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
இதில் கீழே விழுந்த டில்லி ராணியை கத்தியுடன் விரட்டியதாகவும், பாதுகாப்புக்காக அங்கிருந்த ஏ.டி.எம் மையத்தில் அவர் நுழைந்த போதும் விடாமல் துரத்திச்சென்று, டில்லி ராணியின் இடது கை மற்றும் தோள்பட்டை பகுதியில் கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் கூடி கூச்சலிட்டதும் அங்கிருந்து மேகநாதன் தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த டில்லி ராணியை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், மேகநாதனை தேடி வருகின்றனர்.