தாய் அல்லது தந்தை, இவர்களில் யாராவது ஒருவரது பராமரிப்பில் வளரும் குழந்தையை கூட தத்தெடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தகாத முறையில் குழந்தை பெற்ற சிறுமி ஒருவருக்கு தற்போது 18 வயது ஆன நிலையில், அவரது அனுமதி உடன் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதியர் முன்வந்தனர். பாவூர்சத்திர பத்திரப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்தபோது, குழந்தையின் தந்தையிடமும் அனுமதி பெற்றுவருமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அந்த தம்பதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குழந்தையின் தந்தை யார் என்றே தெரியாததால் அவரது ஒப்புதலை பெறுவது கடினம் எனவும், இந்து மத தத்தெடுப்பு சட்டத்தின்படி தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரின் பராமரிப்பில் வளரும் குழந்தையை கூட தத்தெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
குழந்தையை தத்தெடுக்க முன்வந்த தம்பதியையும் பாராட்டிய நீதிபதி, முறையாக பதிவு செய்யுமாறு பத்திரப்பதிவு அலுவலருக்கு உத்தரவிட்டார்.