​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூவர்ண விளக்கொளியில் ஜொலித்த ராஷ்ட்ரபதி பவன்! புதிதாக பதவியேற்ற 72 மத்திய அமைச்சர்கள்!!

Published : Jun 10, 2024 6:17 AM

மூவர்ண விளக்கொளியில் ஜொலித்த ராஷ்ட்ரபதி பவன்! புதிதாக பதவியேற்ற 72 மத்திய அமைச்சர்கள்!!

Jun 10, 2024 6:17 AM

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். அவருடன் சேர்த்து 72 பேர் அடங்கிய அமைச்சரவையும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் உள்ள திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தது, புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா மேடை. வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட 8000 சிறப்பு விருந்தினர்கள் திரண்டிருந்த நிலையில், விழாவில் பங்கேற்க வந்தார், பிரதமர் மோடி.

மாலை சரியாக 7-15 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழா மேடைக்கு வந்ததும், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா துவங்கியது.

முதலில் நரேந்திர மோடி பதவியேற்றார். பண்டித நேருவுக்குப் பின் பிரதமர் பதவியில் தொடர்ந்து 3-வது முறையாக அமரும் மோடிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா ஆகிய மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர்.

ஷிவ்ராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஹெச்.டி. குமாரசாமி, ஜோதிராதித்ய சிந்தியா, கிஷண் ரெட்டி உள்ளிட்ட 31 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

எல் முருகன், ராம்தாஸ் அத்வோலே, சோமண்ணா, ஷோபா கரந்த்லாஜே, சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் உள்ளிட்ட 36 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்ற அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அண்டை நாடுகளின் தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டாவின் வீட்டில் நடந்த இரவு உணவு விருந்தில் பங்கேற்றனர்.

புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வினர் 61 பேரும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கூட்டணிக் கட்சியினர் 11 பேரும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.