​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரவல் புல்லட்டில் வேகம்.. திருமண நாளில் அரங்கேறிய விபரீதத்தின் திகில் பின்னணி..! திடீர் பிரேக் லாரியால் சிறுவன் உயிரிழப்பு

Published : Jun 08, 2024 9:46 PM



இரவல் புல்லட்டில் வேகம்.. திருமண நாளில் அரங்கேறிய விபரீதத்தின் திகில் பின்னணி..! திடீர் பிரேக் லாரியால் சிறுவன் உயிரிழப்பு

Jun 08, 2024 9:46 PM

சென்னை திருவொற்றியூரில் திருமண நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்கறிஞர் , லாரியின் பின் பக்கம் மோதியதில், அவரது 5 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். நண்பரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்ற போது நிகழ்ந்த விபரீத விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

திருமண நாளில் தங்கள் வீட்டு குழந்தையின் உயிரை பறி கொடுத்து விட்டு, எதிரிக்கும் இந்த நிலைவரக் கூடாது என்று... உறவினர்கள் தலையில் அடித்து அழுது கொண்டிருக்கும் சோகக்காட்சிகள் தான் இவை..!

திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேகர், இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகன் கிருஷ்சாந்த் உடன் திருமண நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். தன்னிடம் கார் இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தாமல் தனது நண்பரின் புல்லட் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு கனரக வாகனங்கள் அதிகமாக இயக்கப்படும் மணலில் எக்ஸ்பிரஸ் சாலையை நோக்கி சென்றார்.

மணலி எம்.எப்.எல் சந்திப்பு அருகே தனக்கு முன்னால் சென்ற பி.எம்.பி இரும்பு ஆலைக்கு சொந்தமான லாரி ஒன்று திடீர் பிரேக் போட்டதால், புல்லட்டின் வேகத்தை உடனடியாக கட்டிப்படுத்த இயலாமல் பின் பக்கம் மோதியதால், பைக்கின் முன்பக்கம் அமர்ந்திருந்த, சேகரின் மகன் கிருஷ்சாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். சேகரும் அவரது மனைவியும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். இருவரையும் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சேகர் தம்பதி 6 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அண்ணா நகரில் உள்ள மால் ஒன்றிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்திருப்பதாக கூறி உறவினர்கள் கதறி அழுதனர்.

எம்.எப்.எல் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் முறையாக பணியில் இருந்தாலும், கனரக வாகன ஓட்டிகள் இலகு ரக வாகனங்களுக்கு வழி கொடுக்காமல், சாலையை முழுமையாக ஆக்கிரமித்தபடி போட்டி போட்டு ஓட்டிச்செல்வதாகவும், அவற்றை முந்திச்செல்ல முயலும் போது இது போன்ற விபரீத விபத்துக்கள் நிகழ்வதாகவும் இருசக்கர வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.