​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏய்.. புடி ..புடி.. திருடவா செய்ற.. சோதனையில் ஓடிய களவாணியை விரட்டிச்சென்று மடக்கிய போலீசார்..! சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

Published : Jun 07, 2024 5:59 PM



ஏய்.. புடி ..புடி.. திருடவா செய்ற.. சோதனையில் ஓடிய களவாணியை விரட்டிச்சென்று மடக்கிய போலீசார்..! சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

Jun 07, 2024 5:59 PM

ஓடும் பேருந்துக்குள் செல்போனை திருடியவனை கண்டு பிடிக்க போலீசார் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்திய நிலையில்,  தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் விரட்டிப்பிடித்த சம்பவம் கோவை பேருந்து நிலையத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு பேருந்தில் பயணியின் செல்போனை அபேஸ் செய்த ஆசாமியை கண்டு பிடிக்க போலீசார் சோதனை செய்யும் காட்சிகள் தான் இவை..!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் ஈஷா யோகா மையம் சென்று விட்டு அரசு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் பையில் இருந்த ஸ்மார்ட் போனை யாரோ மர்ம நபர் அபேஸ் செய்து விட்டதை அறிந்து பதறிப் போனார். பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் விவரத்தை தெரிவித்தார். அதற்குள்ளாக பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது.

அந்த பேருந்து நடத்துனரின் அறிவுருத்தலின் படி ஓடிச்சென்று, காந்திபுரம் நகர பேருந்து நிலைய புறகாவல் நிலைய தலைமை காவலர் கந்தசாமியிடம் செல்போன களவாடப்பட்டது குறித்து புகார் அளித்தார் ராஜ். அதுவரை மற்ற பயணிகளை இறங்கிச்செல்ல நடத்துனர் அனுமதிக்கவில்லை. போலீசார் பேருந்தில் ஏறி ஒவ்வொரு பயணியாக சோதனை செய்ய தொடங்கினர்.

பெரிய பெரிய பேக்குகளுடன் வந்திருந்த பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி வரிசையாக நிற்க வைத்து 3 போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்பொழுது மொபைல் போனை திருடியவன் வரிசையில் இருந்து தப்பி ஓடுவதை கண்ட காவல்துறையினர் விரட்டிச்சென்று அவரைப் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பிரபல ஜேப்படி திருடன் போண்டா ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் கூட்டமான பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் தங்கள் செல்போன்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.