பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்வதற்கு முன் விஜயவாடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற மிக மோசமான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து தெலுங்கு தேசத்துக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
கட்சியின் 40 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தெலுங்கு தேசம் பெற்றிருப்பதாகவும், 5 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தை 30 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ஆட்சியில் தான் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாகவும், எதற்காகக் கைது செய்யப்பட்டேன் என்பதற்கு, இதுவரையில் உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.