என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பேசப்படும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் உதவிஆய்வாளராக 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
1998 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு இடமாற்றலான போது அங்கு ரவுடி கோ.சி.ஜான் என்பவர் தான் வெள்ளத்துரை டீமின் முதல் என்கவுண்டர் சம்பவம்.
அதனைத் தொடர்ந்து வெள்ளதுரையின் டீம் சென்னையில் அயோத்தி குப்பம் வீரமணி உட்பட பல்வேறு சம்பவங்களில் 12க்கும் மேற்பட்டவர்களை என்கவுண்டர் செய்தனர்.
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் வெள்ளத்துரை இடம்பெற்றிருந்தார்.
ரவுடிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்ற வெள்ளத்துரை தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார்.
வெள்ளிக்கிழமைடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழக காவல்துறை வட்டாரத்தில் பேசுப் பொருளாகி உள்ளது.
2013 ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணை கைதியின் மரணமே இதற்கான பின்னணியாக கூறப்படுகிறது.
2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் நடுரோட்டில் வைத்து ரவுடிகளால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
குமார் என்ற கொக்கிகுமார் என்ற மற்றொரு ரவுடி கடந்த 2013 ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.
சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கயை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள வெள்ளத்துரை அதற்கான சட்ட ஆலோசனையிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.