மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி, பால், பன்னீர், சந்தனக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகமும், அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயம் முன்பு சிவன், பார்வதி, காளி, கருப்பசாமி வேடமணிந்தவர்களின் நடனமும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 8-ஆவது நாளில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கீழப்படுகை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய வைகாசி விசாக திருவிழாவில் தீமிதித்த பக்தர்கள், பூசாரி முன் மண்டியிட்டு சாட்டையடி வாங்கும் விநோத வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, அணவயல் கிராமத்தில் உள்ள தாணான்டியம்மன் கோவில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.