அதிகாலையில் ரயிலில் ஏறி ரவுசு காட்டிய போதை கும்பல்.. குமுறி எடுத்த இளைஞர்...!
Published : May 26, 2024 9:39 PM
அதிகாலையில் ரயிலில் ஏறி ரவுசு காட்டிய போதை கும்பல்.. குமுறி எடுத்த இளைஞர்...!
May 26, 2024 9:39 PM
கோவை வழியாகச் செல்லும் ஆலப்புழா ரயிலில் அதிகாலை 3 மணியளவில் ஏறி மதுபோதையில் கூச்சலிட்டுக் கொண்டு வந்த இளைஞர்கள் சிலர், தங்களை தட்டிக் கேட்டவர்களை அடித்து தாக்கி விட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றனர்.
சென்னையிலிருந்து கேரளாவின் ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது மனைவி மற்றும் சகோதரர் குடும்பத்தினருடன் பயணித்தார் கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். முன்பதிவு பெட்டியான எஸ்.10 கோச்சில் நுழைவு வாசல் பகுதியில் அவர்களுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
பச்சிளம் குழந்தையோடு குடும்பத்தினர் அவரவர் படுக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் ஈரோட்டை வந்தடைந்தது அந்த ரயில்.
ரயிலில் ஏறிய இளைஞர்கள் 6 பேர், புகை பிடித்துக் கொண்டும், கத்தி கூச்சலிட்டவாறு நடனமாடிய படியே இருந்ததாக கூறப்படுகிறது. அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தவர்களில் தூக்கம் கலைந்து எழுந்த சிலரும், அந்த கும்பல் மதுபோதையில் இருப்பதை உணர்ந்து அவர்களை கண்டிக்க முன்வரவில்லை.
ஆனால், தங்களது கை குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்ததால் அந்த இளைஞர்களை அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளார் மணிகண்டன். ஆனால், எதையும் கண்டு கொள்ளாத அந்த கும்பல் தொடர்ந்து சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் அந்த கும்பலிடம் அமைதியாக இருக்குமாறு கூறவே அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது எங்கள் ஏரியா என கும்பலில் ஒருவன் கூறிக் கொண்டு மணிகண்டனை அடிக்க பதிலுக்கு நான் மட்டும் யாராம் எனக் கேட்டு அடித்ததோடு, இருவரும் வாசலைத் தாண்டி கழிப்பறை பகுதிக்குச் சென்று ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
சண்டையை மணிகண்டன் குடும்பத்து பெண்கள் தடுத்து நிறுத்திய நிலையில், தகராறு குறித்து எஸ்.10 பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் ரயில்வே உதவி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதற்குள் ரயில் திருப்பூரை வந்தடையவே அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே கொலை மிரட்டல் விடுத்து கீழே இறங்கியது.
ரயில் கோவையை வந்தடைந்ததும் அங்கு வந்த 2 போலீஸார் விசாரித்து விட்டுச் சென்றனர். போத்தனூர் ஸ்டேஷனில் இறங்கிக் கொண்ட மணிகண்டன் இதுகுறித்து அங்குள்ள ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். புகாரினை திருப்பூருக்கு அனுப்பி வைத்து அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸார் உறுதியளித்தனர்.
தாக்குதல் தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 20 வயது அசோக் ஆகியோரை பிடித்தனர் போலீஸார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 6 பேரும் மாற்று டிரைவர்களாக பணியாற்றி வருவதும், ஓபன் டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் ஏறியதும் தெரிய வந்தது. ரகளையில் ஈடுபட்டு வரும் மற்ற 4 பேரையும் தேடி வருவதாக தெரிவித்தனர் போலீஸார்.
தகராறின் போது மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என வேதனை தெரிவித்த மணிகண்டனின் உறவினர் ரமாபிரபா, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தங்களின் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.