அந்தியில் மயங்கினால்.. சந்தி சிரிக்கும் ப்ரோ.. பெண் குரல் புள்ளீங்கோஸ்..! வெளியே சொன்னா வெட்கக்கேடு
Published : May 18, 2024 8:36 PM
அந்தியில் மயங்கினால்.. சந்தி சிரிக்கும் ப்ரோ.. பெண் குரல் புள்ளீங்கோஸ்..! வெளியே சொன்னா வெட்கக்கேடு
May 18, 2024 8:36 PM
சென்னையில் டேட்டிங் செயலியில் ஆண்களிடம், பெண்கள் போல பேசி மயக்கி பணம் பறித்த பிளாக்மெயில் புள்ளீங்கோ பாய்ஸ் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதலர் தினம் படத்தில் சின்னி ஜெயந்த், கவுண்டமணியிடம் இண்டர் நெட்டில் பெண் போல சாட்டிங் செய்து பணம் பறிப்பார்
அதே போல டேட்டிங் செயலியில் ஆண்களிடம் பெண் போல சாட்டிங் செய்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட பட்டாபிராம் பிளாக்மெயில் பாய்ஸ் இவர்கள் தான்..!
சென்னை வியாசர் பாடியை சேர்ந்த தாமோதரக் கண்ணன் என்பவர், தன்னுடன் டேட்டிங் செயலில் சாட்டிங் செய்த பெண் ஒருவர், தற்கொலை செய்து கொண்டதாக கூறி சிலர் தன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதாக வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். முதலில் 13 ஆயிரத்து 500 ரூபாயை மிரட்டி பெற்றவர்கள், தங்களை காவல்துறையினர் என்று கூறி தற்போது 70 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
பணம் கேட்டு மிரட்டிய செல்போன் எண்களை வைத்து பட்டாபிராமை சேர்ந்த லியோ துரை, தமிழ் என்கிற தமிழன், சீனிவாசன், முகமது ரியாஸ், பிரிதிவிராஜ் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
பெண்களுடன் ரகசிய தொடர்புக்காக டேட்டிங் செயலியை நாடும் ஆண்களிடம், பெண்கள் பெயரில் போலியான கணக்கு தொடங்கி சாட்டிங் செய்வதை இந்த 5 பேரும் வழக்கமாக்கி உள்ளனர்.இவர்கள் பேக் ஐடி என்பது கூட தெரியாமல் பெண் என்று நினைத்து பலர் பணத்தை அள்ளிக்கொடுத்துள்ளனர். சிலரிடம் பேசும் போதே அவர்கள் வசதியானவர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் காதல் வலை வீசி ஆசையை தூண்டும் விதம் சாட்டிங் செய்வது... பின்னர் சண்டையிடுவது போல நடித்து தொடர்பை துண்டித்து விடுவர்.
சில தினங்கள் கழித்து சம்பந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்பு கொண்டு,காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறும் இந்த புள்ளீங்கோ கும்பல், நீங்கள் ஆன் லைனில் பழகிய பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறுவர். அவரது சாவுக்கு நீங்கள் தான் காரணம், உங்கள் மீது எப்.ஐ.ஆர் போடபோகிறோம் என்று மிரட்டி பணம் பறித்து உள்ளனர்.
பலர் லட்சக்கணக்கில் பணத்தை பறி கொடுத்தாலும், வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று எண்ணி புகார் அளிக்காமல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிளாக்மெயிலர்ஸ் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தேவையில்லாத செயலிகளை செல்போனில் இன்ஸ்டால் செய்து பெண்களை தேடிபோனால் என்ன மாதிரியான இம்சைகள் வந்து சேரும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்..!