​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குற்றாலத்தில் உயிரிழப்புகளை தடுக்க செய்ய வேண்டியது என்ன ? உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ? ஒருங்கிணைப்பு இன்மையா ..?

Published : May 18, 2024 2:07 PM



குற்றாலத்தில் உயிரிழப்புகளை தடுக்க செய்ய வேண்டியது என்ன ? உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ? ஒருங்கிணைப்பு இன்மையா ..?

May 18, 2024 2:07 PM

பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முறையான முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததும், அரசின் பல்வேறு துறைகளிடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததுமே காரணம் என்று சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கடந்த 15 ஆம் தேதி பழைய குற்றாலத்தில் ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.. ஆனால், 16 ஆம் தேதி காலை முதலே அருவியில் லேசாக தண்ணீர் வரத்து இருந்தது.. 16 ஆம் தேதி இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. நீர் வரத்து குறைந்ததை அடுத்து, 17 ஆம் தேதி காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

17 ஆம் தேதி சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் குவிந்து குளித்து வந்த நிலையில்தான் 1.30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட இந்த சம்பவத்தின் போது,

 அருவிப் பகுதிகளில் திடீர் வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறிந்து சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் அதி நவீன கருவிகளை மாவட்ட நிர்வாகம் இன்னும் அமைக்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிவிப்பு வந்த பிறகும், மழை பெய்த நேரத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் பழைய குற்றால அருவிக்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகளை முன் கூட்டியே கயிறு கட்டி தடுக்காதது ஏன் ?

அந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார், அங்கு இரு காவலர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அருவியில் குளிக்க சுற்றுலாவாசிகளை அனுமதித்தது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.

சீசன் இல்லை என்ற நிலையில், பழைய குற்றலாத்தில் பாதுகாப்பு பணியில் வெறும் 2 போலீசார் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகவும், பயணிகளை அவர்கள் தடுக்க தவறியதும் இந்த உயிரிழப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு மலையில் ஆட்களை நியமித்துள்ள வனத்துறை , குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு உரிய வெள்ள எச்சரிக்கையை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், விபத்து நடந்த பழைய குற்றாலத்தில் வனத்துறை எந்த எச்சரிக்கையும் வழங்கவில்லை. அதற்கு காரணம், இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எல்லையில் வருவதால், புலிகள் காப்பகத்தினர் தான் எச்சரிக்கை விடவேண்டும் என குற்றால வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள நீர் தேக்கங்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற தரவுகளை மட்டுமே கொடுத்துவிட்டு நீர்வளத்துறை ஒதுங்கிக்கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆயக்குடி, சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய பகுதிகளில் மழைமாணி பொருத்தப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் இன்னும் மழைமாணி கூட பொருத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வனத்துறை, நீர்வளத்துறை, சுற்றுலாத்துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகிய அமைப்புகளுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பும் இல்லாததால் அருவியில் ஆர்ப்பரித்த திடீர் வெள்ளத்தை அறிந்து கொள்ள இயலவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அருவிக்கு மேல் உள்ள பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கனமழை, வெள்ளம் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு முன் எச்சரிக்கை விடுக்கவும், அருவியில் குளிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு நிரந்தரமான ஒரு திட்டத்தை தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் மழை நேரத்தில் அருவிகளுக்கு குளிக்க செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.