என்னோட படுக்கை அறையில் வயகரா மாத்திரை.. மது பாட்டில்.. வீடு ஆக்கிரமிப்பாளர் அட்டூழியம்..! 34 வருடம் போராடி வீட்டை மீட்ட அமெரிக்க பெண்..!
Published : May 09, 2024 6:25 AM
என்னோட படுக்கை அறையில் வயகரா மாத்திரை.. மது பாட்டில்.. வீடு ஆக்கிரமிப்பாளர் அட்டூழியம்..! 34 வருடம் போராடி வீட்டை மீட்ட அமெரிக்க பெண்..!
May 09, 2024 6:25 AM
சென்னை செனாய் நகரில் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் இருந்த, தனது தாத்தா பாட்டிக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மீட்க முடியாமல் 34 வருடமாக போராடிய அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண் ஒருவர், வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ராகார்க்கின் அதிரடி நடவடிக்கையால் 10 நாட்களில் வீட்டை மீட்டுள்ளார்
34 வருடங்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருந்துவமனையில் டீனாக பொறுப்பு வகித்தவர் விக்டர். இவர் தனது மனைவியுடன் செனாய் நகரில் உள்ள 2 கிரவுண்ட் வீட்டில் வசித்து வந்தார். பணி ஓய்வுக்கு பின்னர் விக்டர் தனது மனைவியுடன் , அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு சென்றார். முன்னதாக தனது வீட்டிற்கு பின் புறம் வசித்து வந்த சாந்தகுமார் என்பவரிடம் தனது வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
விக்டரும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை வந்த விக்டரின் மகள் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சாந்தகுமாரின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் துரத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது பூர்வீக வீட்டை மீட்க இயலாமல் ஏமாற்றத்துடன் சென்ற அவர், தனது பெயரில் இருந்த அந்த வீட்டை தனது மகள் தீபா பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக அவர்கள் இந்தியா வரும் போதெல்லாம் அந்த வீட்டை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ந்தேதி தனது பூர்வீக வீட்டுக்கு சென்ற தீபா அங்கு பல தவறான செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுவதை கண்டு வேதனை அடைந்தார். சாந்தகுமாரின் பேரன் எனச் சொல்லிக் கொண்டு அந்த வீட்டை ஆக்கிரமித்திருந்த தினேஷ் என்பவர், தன்னை நாய்களை ஏவி கடிக்க விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 27 ந்தேதி புகார் அளித்த தீபா, வீடு தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் வழங்கினார்.
ஆக்கிரமிப்பாளர் மிரட்டியதால், அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ராகார்க்கை சந்தித்து தீபா நேரடியாக புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.
வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது தீபாவிற்கு சொந்தமான பொருட்களை அகற்றிவிட்டு தனது வசதிக்கு ஏற்ப வீட்டை மாற்றி இருந்தது தெரியவந்தது.
போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து வீட்டை ஆக்கிரமித்திருந்த தினேஷ் வீட்டின் சாவியை தீபாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்
வீட்டின் பின் பக்கம் வாடகைக்கு விடப்பட்ட அறைகளில் தங்கி இருப்பவர்கள் வீட்டை காலி செய்ய 2 மாதம் கால அவகாசம் கேட்டதால், அவர்களுக்கு அவகாசம் வழங்கிய தீபா, 34 வருடம் கழித்து, தனது தாத்தா பாட்டி வசித்த வீடு மீண்டும் தனது கைக்கு வந்துள்ளது என்று அமெரிக்கா சென்று பெருமையாக சொல்வேன் என்றார்
இந்த வழக்கில் வீடு தொடர்பான முழுமையான ஆவணங்கள் தன்னிடம் இருந்த நிலையில், வீட்டை ஆக்கிரமித்திருந்த தினேசிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் போலீசார் எளிதாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக தீபா தெரிவித்தார்