“சின்ன வயசு காதல் சார்.. எனக்கு வேற வழி தெரியல அதான் இப்படி பண்ணிட்டேன்”
Published : Apr 24, 2024 6:18 AM
“சின்ன வயசு காதல் சார்.. எனக்கு வேற வழி தெரியல அதான் இப்படி பண்ணிட்டேன்”
Apr 24, 2024 6:18 AM
திருச்சி சோமரசம் பேட்டை அருகே தாய்மாமன் மகளை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டியை சேர்ந்தவர் லிங்கம் , இவரது மனைவி கொடிமலர். இவர்கள் பழக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ராஜகுமாரன் பாத்திரக்கடையில் சூப்பர்வைசராக வேலைப்பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று காலை 6 மணிக்கு லிங்கம், தனது பழக்கடைக்கு தேவையான பழங்களை வாங்க மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மனைவி கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயம்பட்ட மனைவியை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கொடிமலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் கத்தியால் தாக்கி கொடிமலரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடிமலரின் மகன் ராஜகுமாரன் தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதும் தெரியவந்தது.
இதனால், தாயின் இறுதிச்சடங்கில் அழுதபடியே பங்கேற்ற அவரது மகன் ராஜகுமாரனை பிடித்து போலீசார் விசாரித்தபோது கொலைக்கான மர்மம் விலகியது. சிறுவயதில் இருந்தே ராஜகுமாரன் தனது தாய்மாமன் மகளை தீவிரமாக காதலித்து வந்ததாகவும் அதற்கு தாய் கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தான் விஷம் அருந்தியதாகவும் அதன் பின்னரும் தனது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தாய் மீது கோபத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார் ராஜகுமாரன்.
தனது காதலியை மணப்பதற்கு இடையூறாக இருக்கும் தாயை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு சம்பவத்தன்று கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் , அவர் இறந்தது உறுதியானதும் தான் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றுமே தெரியாதது போல அழுது நடித்ததாகவும் ராஜகுமாரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ராஜகுமாரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.