பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தையொட்டி பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்கள், 500 கிலோ பழங்கள், நவதானியங்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டது.
மேடையில் மணக்கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் கோவில் சார்பில் பட்டு சாத்தும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அப்போது கோவிலில் கூடிய ஏராளமான பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் விருந்து நடைபெற்றது. திருக்கல்யாண மொய் எழுதி பக்தர்கள் பிரசாதம் பெற்றுக்கொண்டனர்.