தேனி, வட சென்னை, சேலம் போன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டன.
வடசென்னை வேட்பு மனு பரிசீலனையின் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ தம்மீது நிலுவையில் உள்ள கொலை முயற்சி வழக்கை பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை எனக்கூறி தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிறுத்தி வைத்திருந்தார்.
வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை மனோ தாக்கல் செய்ததை அடுத்து அவரது மனு ஏற்கப்பட்டது.
தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனுவில் கையொப்பமிட்டு இருந்த நோட்டரி பப்ளிக் சுரேஷ் என்பவரின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால், அவரது மனு செல்லாது எனறும், அதை ஏற்கக் கூடாது எனவும் பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
வழக்கறிஞர் சுரேஷ் உரிமத்தை நீட்டிக்க ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகக் கூறி ஆவணங்களை தாக்கல் செய்ததை அடுத்து தி.மு.க. வேட்பாளரரின் மனுவும் ஏற்கப்பட்டது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி தினகரனின் பிரமாண பத்திரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று கூறி அவரது வேட்பு மனுவை ஏற்க எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன.
தொழில்நுட்பக் கோளாறால் இணையத்தில் பிரமாண பத்திரம் தென்படவில்லை என்று டி.டி.வி தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்று நீண்ட இழுபறிக்குப் பின் மனு ஏற்கப்பட்டது.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு, சேலம் மேற்கு மற்றும் வடக்கு ஆகிய 2 தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாகக் கூறி அ.தி.மு.க வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேற்கு தொகுதி வாக்குரிமையை நீக்க விண்ணப்பித்துள்ள ஆவணத்தை சமர்ப்பித்ததால் செல்வகணபதியின் மனு ஏற்கப்பட்டது.