முதலில் மனுத்தாக்கல் செய்வது யார்..? தி.மு.க. - அ.தி.மு.க. இடையே நீயா.. நானா.. போட்டி!
Published : Mar 25, 2024 8:34 PM
முதலில் மனுத்தாக்கல் செய்வது யார்..? தி.மு.க. - அ.தி.மு.க. இடையே நீயா.. நானா.. போட்டி!
Mar 25, 2024 8:34 PM
வட சென்னை தொகுதியில் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக தேர்தல் அதிகாரி முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வட சென்னை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு காலை வந்திருந்தார், அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ.
ஏற்கனவே காத்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோருடன் அலுவலகத்துக்குள் சென்ற ராயபுரம் மனோவுக்கு வருகை நேரம் 11-59 என்று குறிப்பிட்டு டோக்கன் எண் 7 வழங்கப்பட்டது.
டோக்கன் பெற்ற அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருந்தனர்.
அப்போது இங்கு வந்த தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் நேரடியாக தேர்தல் அதிகாரி அறை அமைந்துள்ள முதல் மாடிக்கு சென்றனர்.
சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தவுடன் தி.மு.க.வினர் அறைக்குள் சென்றனர்.
அவர்களுக்கு பின்னாலேயே அ.தி.மு.க.வினரும் அறைக்குள் நுழைந்தனர்.
முதலில் உள்ளே சென்ற சேகர் பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தேர்தல் அதிகாரிக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தனர். அவர்களுக்கு பின்னால் சென்று நின்ற அ.தி.மு.க.வினர், முதலில் வந்து டோக்கன் பெற்றது தாங்கள் தான் என்பதால் முதலில் மனுத்தாக்கல் செய்ய வேண்டியது தாங்கள் தான் என்று தெரிவித்தனர்.
அதற்கு, தங்களிடம் 2-ஆம் எண் டோக்கன் இருப்பதாகவும், அதனால் தாங்கள் தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சேகர் பாபு கூறியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வருகை பதிவேட்டில் யார் முதலில் வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து பின்னர் மனுவை பெற்றுக் கொள்வதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
வருகைப் பதிவை ஆராய்ந்த பின், அ.தி.மு.க. வேட்பாளர் தான் முதலில் வந்துள்ளார் என தேர்தல் அதிகாரி கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு, தங்களுடைய டோக்கன் எண் 2 என வாதம் செய்தார். அந்த டோக்கன் கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தி பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த டோக்கனில் கலாநிதி மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்றும் அ.தி.மு.க.வினர் ஆட்சேபித்தனர்.
வாக்குவாதத்தால் தாங்கள் நெடு நேரம் காத்திருக்க நேரிட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து பா.ஜ.க.வினர் தேர்தல் அதிகாரி அறைக்குள் வந்து முழக்கமிட்டனர்.
முத்தரப்பினரையும் வெளியே காத்திருக்க சொல்லி அனுப்பிய தேர்தல் அதிகாரி, டோக்கன் வரிசைப்படி முதலில் தி.மு.க. மாற்று வேட்பாளரான ஜெயந்தி கலாநிதியின் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து 7-ஆம் எண் டோக்கன் பெற்ற அ.தி.மு.க.வினரும் 8-ஆம் எண் டோக்கன் உள்ள தி.மு.க.வினருக்கும் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்யுமாறு அழைத்தார்.
ஜெயந்தி கலாநிதி வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் ராயபுரம் மண்ட அலுவலகத்தில் இருந்து சேகர் பாபு புறப்பட்டு சென்றார்.
வெளியில் தி.மு.க., அ.தி.முக. மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், சேகர் பாபுவின் கார் மீது சில அ.தி.மு.க. கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது
இதனால் 3 கட்சிகளின் தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி 7 நிமிடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க.வினர் புறப்பட்ட பின் கலாநிதி வீராசாமி திரும்பி வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இரு தரப்பும் வேட்பு மனுத்தாக்கல் முடித்த பின் பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாக்குவாத நாடகத்தை அரங்கேற்றிய இரு கட்சியினர் மீதும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாக பால் கனகராஜ் தெரிவித்தார்.