​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

Published : Mar 25, 2024 7:41 PM

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

Mar 25, 2024 7:41 PM

வேட்பு மனுத்தாக்கல் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனுத்தாக்கலில் ஈடுபட்டனர்.  

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்போது உடனிருந்தார். 

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோர் வேட்பு மனு அளித்தனர். 

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடடும் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா, தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெரம்பலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனுவை அளித்தார்.

 சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியமான பிருந்தாதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன், பூங்கா முருகன் கோயிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 

தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன், தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கினார் ..

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியைச் சேர்ந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் உமாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மாற்று வேட்பாளரான தமது மனைவி மற்றும் அமைச்சரும், தனது தந்தையுமான துரைமுருகனுடன் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது இவர்களுடன் சென்ற திமுகவினரை தடுத்த போலீசாரை துரைமுருகன் கடிந்து கொண்டார். 

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கூட்டணி கட்சியினரோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.