​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பஸ் படியில் தொங்கிய மாணவர்கள் தலை சிதறி பலியான கொடுமை..! இந்த உயிர்பலிக்கு யார் பொறுப்பு ?

Published : Mar 13, 2024 7:01 AM



நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பஸ் படியில் தொங்கிய மாணவர்கள் தலை சிதறி பலியான கொடுமை..! இந்த உயிர்பலிக்கு யார் பொறுப்பு ?

Mar 13, 2024 7:01 AM

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதியை மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து உரசிய விபத்தில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் தலைசிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது`

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று மதுராந்தகம் நோக்கி சென்றது.

பேருந்துக்க்குள் கூட்டமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

பேருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலையோரம் விதியை மீறி கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பேருந்து ஓட்டுனரின் அதிவேகத்தால் தனியார் பேருந்து, கண்டெய்னர் லாரியை உரசிய படி சென்றுள்ளது.

இதில் பேருந்துக்கு வெளியே படியில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கண்டெய்னரின் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

மூன்று பேர் சம்பவ இடத்தில் உடல் மற்றும் தலை நசுங்கி பலியான நிலையில் பலத்த காயத்துடன் மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவரும்  சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த கோர விபத்தில் பலியான 3 பேர் மதுராந்தகத்தில் இயங்கி வரும் மாலோலன் என்ற தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்களான ராமாபுரம் கமலேஷ் , சோத்துப்பாக்கம் மோனிஷ், மோகல்வாடி தனுஷ் என்று சுட்டிக்காட்டிய போலீசார் 4 வது நபர் மோகல் வாடி ரஞ்சித் என்கின்ற ரவிச்சந்திரன் என்று தெரிவித்தனர்.

4 பேரின் உயிரை பலி கொண்ட இந்த கோர விபத்துக்கு, மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு போனதும், தனியார் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பற்ற வேகமும் காரணமாக கூறப்பட்டாலும், தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்தால் விபத்துக்கள் உண்டாகும் என்பதை மறந்து நிறுத்தி வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணம் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

அதே நேரத்தில் முறையாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு, லாரிகளை அப்புறப்படுத்த வேண்டிய நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரின் மெத்தனமும் இது போன்ற விபத்துக்கள் தொடர காரணமாகி விடுவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.