அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த 18 வயது இந்திய மாணவர் அகுல் தவான், மது குடித்ததாலும், அதிக குளிர்ச் சூழலில் அதிக நேரம் இருந்ததாலும் உறைந்துபோய் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம், குளிர்கால விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு வந்த சில நாட்களில், அகுல் தவான் நண்பர்களுடன் வெளியே சென்று மது அருந்தியுள்ளார்.
பின்னர், கல்லூரி வளாகம் அருகே இருந்த இரவு விடுதிக்கு சென்ற அவரை அங்கிருந்த பணியாளர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், இரவு விடுதி பணியாளர்கள் ஏற்பாடு செய்த வாகன வசதியையும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நண்பர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அகுலை போலீஸார் தேடியபோது, பல்கலைக் கழக கட்டடம் அருகே அகுலின் சடலம் கிடந்துள்ளது.
உடல் வெப்பம் குறைந்து ஹைபோதெர்மியா பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.