20 மாவட்டங்களில் குடிநீர் பாதிப்பு ஏற்படக் கூடிய மேகதாது விவகாரத்தை விட முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு என்ன உள்ளது என்று சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேகதாது விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய இ.பி.எஸ்., தங்கள் ஆட்சியில் காவிரி ஆணையம் கூட்டத்தில் மேகதாது குறித்து பேச அனுமதித்ததே இல்லை என்றார்.
ஆனால் கடந்த 1-ஆம் தேதி மேகதாது குறித்து காவிரி ஆணையத்தில் கர்நாடக அதிகாரிகள் பேசிய போது தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்யாதது ஏன் என்று அவர் வினவினார்.
அதிகாரத்தை மீறி காவிரி ஆணையம் மேகதாது குறித்து பேசியது தொடர்பாக பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இ.பி.எஸ். கூறிய கருத்துகளுக்கு நீர்வள அமைச்சர் பதில் கூறுவார் என்றார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த இ.பி.எஸ்., எதிர்க்கட்சியினரை பேரவை தலைவர் பேச விடுவதே இல்லை என்றும் அமைச்சரே பதில் அளிக்க தயாராக இருக்கும் போது சபாநாயகர் தாங்கள் பேச அனுமதி மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.