5 கொலை சுரேஷ் தெரியுமா.. இன்னும் ஒரு தலை பாக்கியாம்.. தாதாவை மடக்கிய போலீஸ்..! அண்ணனுக்காக 10 வருட பழிக்குப்பழி
Published : Feb 18, 2024 6:40 AM
5 கொலை சுரேஷ் தெரியுமா.. இன்னும் ஒரு தலை பாக்கியாம்.. தாதாவை மடக்கிய போலீஸ்..! அண்ணனுக்காக 10 வருட பழிக்குப்பழி
Feb 18, 2024 6:40 AM
செங்கல்பட்டு அருகே அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக சினிமா பாணியில் 5 பேரை அடுத்தடுத்து கொலை செய்ததாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்படும் இளைஞர், 6 வது நபரை கொலை செய்வதற்காக நாமக்கல்லில் பதுங்கி இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவரான விஜயகுமார் கடந்த 2012 ஆம் ஆண்டு மணல் கடத்தல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட விஜயகுமாரின் தம்பி சுரேஷ்குமார் , தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்குவேன் என அண்ணணின் சமாதியில் சபதம் செய்ததாக கூறப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக விஜயகுமார் கொலையில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த குப்பன் என்பவர் 2012ஆம் ஆண்டு மறைமலைநகரில் காரில் சென்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2014ஆம் ஆண்டு கிண்டியில் வைத்து துரைதாஸ் என்பவர் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் நித்யானந்தம் என்பவரை பி.வி.களத்தூர் பகுதியில் அவரது வீட்டில் வைத்தே மர்ம கும்பல் தீர்த்துக்கட்டியது. சந்துரு என்பவர் சென்னையில் வைத்தும், சேகர் என்பவர் பி.வி. களத்தூர் செல்லும் வழியில் உள்ள செல்விநகரில் வைத்தும் கொல்லப்பட்டனர்.
விஜயகுமார் கொலைக்கு பழிக்குப்பழியாக 5 பேரை சுரேஷ்குமார் கொலை செய்ததாக அவர் மீது 5 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 6 வதாக பங்க் வெங்கடேசன் என்பவர் மட்டும் மீதமுள்ள நிலையில் அவரை தீர்த்துக்கட்டும் திட்டத்துடன் சுரேஷ்குமார் நாமக்கல்லில் பதுங்கி இருப்பதாக செங்கல்பட்டு போலீசாருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள ரவுடி கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை பிடிப்பது போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது.
செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசார் நாமக்கல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அங்கு பதுங்கி இருந்த சுரேஷ்குமாரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
சுரேஷ்குமார் நீதிமன்றம் வருவதை அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் குவிந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி 5 கொலை சுரேஷ்குமார் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டான். சுரேஷ்குமாருடன் தொடர்பில் இருந்த ரவுடிகளின் பின்புலம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.