​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேலும் ஒரு பட்டாசு ஆலையில் குலை நடுக்க வைக்கும் விபத்து! செங்கல் குவியலான கட்டிடங்கள்!!

Published : Feb 17, 2024 5:53 PM



மேலும் ஒரு பட்டாசு ஆலையில் குலை நடுக்க வைக்கும் விபத்து! செங்கல் குவியலான கட்டிடங்கள்!!

Feb 17, 2024 5:53 PM

சிவகாசி அருகே ஃபேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்றில் வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

செங்கல் குவியலாகக் காணப்படும் இந்த இடம், அசோக் ஸ்பார்க்ளர் என்ற பட்டாசு ஆலை. சிவகாசியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்துசாமி புரத்தில் இயங்கி வந்த இந்த ஆலையில் வானில் சென்று வெடிக்கும் குழாய் வடிவ ஃபேன்சி பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

பட்டாசுகளை தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருட்களை தொழிலாளர்கள் சிலர் அறை ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, அதில் தீப்பற்றியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பலத்த வெடி விபத்தில் ரசாயனம் கலக்கும் அறை உட்பட மொத்தம் 5 அறைகள் தரைமட்டமாயின.

வெடிவிபத்தின் போது ரசாயனம் கலக்கும் அறையில் இருந்தவர்கள், பக்கத்து அறையில் பணியாற்றியவர்கள், மரத்தடியில் இருந்தவர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

இதில் 4 பேர் பெண்கள் ஆவர். அவர்களின் உடல்களை மீட்ட தீயணைப்புப் படையினர், படுகாயமடைந்த 3 பேரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கு 3 விதமான ரசாயனங்களை குறிப்பிட்ட அளவுகளில் கலக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதுவும் வெயில் அதிகரிப்பதற்கு முன் காலை 9 மணி வாக்கில் ரசாயனத்தை கலக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்பதும் நடைமுறை.

இதை மீறி வெயில் அதிகமாக உள்ள நண்பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கலவைப் பணியில் தவறு ஏற்பட்டு வெடி விபத்து நேரிட்டிருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வழக்கமாக ரசாயன கலவை செய்யும் அறையில் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதை மீறி விபத்து நேரிட்ட அறையில் 8 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

விபத்தை அடுத்து இப்பகுதி முழுவதும் இடிபாடுகளாகவும் மரங்கள் கூட கருகிய நிலையிலும் காட்சியளித்தன. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.