புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதியானதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவு பகுப்பாய்வு கூடத்தில் பஞ்சு மிட்டாயை ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி அதில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி பஞ்சுமிட்டாய் தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும்,Rhodamine-B மூலம் உணவுப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையரால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.