சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்க வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாராயணப் பிள்ளை உள்ளிட்ட ஆறு சகோதரர்களால் கட்டப்பட்ட அந்த திரையரங்கம் 1983-ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்றத் தலைவர் ப. உ. சண்முகத்தால் திறந்து வைக்கப்பட்டது. மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்கங்கள் அறிமுகமாகாத அன்றைய கால கட்டத்தில் புதுப் படங்களை பார்த்து கொண்டாடுவதற்கான களமாக உதயம் வளாகம் விளங்கியதாக ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.
உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் ஆகிய 4 திரையரங்குகள் இருந்த போதிலும், அண்மை காலமாக ரசிகர்கள் வருகை குறைந்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால் திரையரங்க வளாகத்தை விற்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.