அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்றும் அதை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை பாரத ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை மாற்றி தேர்தல் பத்திர முறையை 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தேர்தல் பத்திர முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் சாசனம் ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுவரை பணமாக்காத தேர்தல் பத்திரங்களை திருப்பி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை விநியோகித்துள்ள பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. முழுமையான விவரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.