​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐஸ் கேக் ஊசிப்போனதாக புகார்... சண்டை போட்ட வாடிக்கையாளர்.. இத நீ தின்பியாய்யா..?

Published : Feb 13, 2024 5:56 PM



ஐஸ் கேக் ஊசிப்போனதாக புகார்... சண்டை போட்ட வாடிக்கையாளர்.. இத நீ தின்பியாய்யா..?

Feb 13, 2024 5:56 PM

வட சென்னையின் பிரசித்தி பெற்ற சீலம் பேக்கரியில் ஊசிப்போன ஐஸ் கேக் விற்றதாக வாடிக்கையாளர் சண்டையிட்ட நிலையில் உரிமையாளர் கேக்கிற்கான தொகையை திருப்பியளித்ததுடன், கடையில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளையும் அப்புறப்படுத்தினார்.

வட சென்னையின் எம்.ஆர் நகரில் பிரபலமான சீலம் பேக்கரி உள்ளது. இங்கு ஐஸ் கேக் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர் அதனை குழந்தைக்கு கொடுத்துள்ளார். கேக் புளிப்பாக இருப்பதாக குழந்தை கூறிய நிலையில், அந்த கேக்கை கையில் எடுத்து பார்த்த போது அது கெட்டுப்போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கேக் ஊசிப்போன நிலையில் இருப்பதாகக்கூறி குடும்பத்தோடு சீலம் பேக்கரிக்கு சென்ற அவர், அதை உரிமையாளரிடம் கொடுத்து சாப்பிடுமாறு கூறினார்.

அதனைக் கையில் எடுத்து பார்த்த அவர் கேக் கெட்டுப் போய் இருப்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.

இத நீ தின்பியாய்யா என்று கேட்ட வாடிக்கையாளர், குழந்தைக்கு ஏதாச்சும் ஆனா என்ன செய்யறது என்று கேள்வி எழுப்பினார்.

வாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறேன்னு சமாளித்த பேக்கரி கடைக்காரர், நான் என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க செய்யிறேன்னு கெஞ்சினார்.

அவர்கள் உணவுப் பொருள் அதிகாரியிடம் புகார் அளிக்கப் போவதாகக் கூறியதால் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட கெட்டுப்போன கேக்குகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டார்.

இதையடுத்து தாங்கள் கேக்கிற்கு கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த கடை உரிமையாளர், அவர்கள் வாங்கியது ஐஸ் கேக் என்றும் அதனை அரை மணி நேரத்தில் சாப்பிட்டிருக்க வேண்டும், 2 மணி நேரம் கழித்து சாப்பிட்டதால் கேக் கெட்டுப்போனதாகத் தெரிவித்தார்.

வட சென்னையில் பெரும்பாலான பேக்கரிகளில் அளவுக்கதிகமான ரசாயன நிறமிகள் கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது.

அந்தக் கடைகளில் தொடர் சோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.