சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் 2 வது நாளாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார இறுதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை விழுப்புரம் திண்டிவனம் திருவண்ணாமலை செஞ்சி திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மக்கள் நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
மாலை முதலே பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் செல்லும் சாலையில் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர்.
பேருந்துகள் இயக்கப்படாமல் முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதிகாரிகள் தங்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். நள்ளிரவுக்குப் பின்னர் கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் போதுமான அளவுக்குப் பேருந்துகள் இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்