​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெற்ற தாயை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் தந்தைக்காக இப்படி ஒரு தியாகமா ..!? போலீஸ் விசாரணையில் அம்பலம்

Published : Feb 09, 2024 6:55 AM



பெற்ற தாயை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் தந்தைக்காக இப்படி ஒரு தியாகமா ..!? போலீஸ் விசாரணையில் அம்பலம்

Feb 09, 2024 6:55 AM

சாப்பாடு போட்டுத் தர தாமதமானதால் தாயை கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக 16 வயது சிறுவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவத்தில் , திடீர் திருப்பமாக வெளியூரில் இருந்ததாக கூறப்பட்ட சிறுவனின் தந்தையை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு கே.ஆர். புரா, பீமய்யா லேஅவுட்டில் வசித்து வந்த சந்திரப்பா - நேத்ரா தம்பதியருக்கு 16 வயதில் மகன் உள்ளான். பத்தாவது முடித்துவிட்டு, டிப்ளமோ பயின்று வரும் நிலையில், சம்பவத்தன்று சாப்பாடு போட்டுத்தர மறுத்ததால் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி சிறுவன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரன் அடைந்தான்.

முலபாகிலு பகுதியில் சொந்தமாக வீடு கட்டும் பணியை பார்வையிட சென்ற சிறுவனின் தந்தை சந்திரப்பாவுக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரச்செய்தனர். பதறிப்போய் வந்த அவர், தாயை கொன்ற பழியுடன் கொலைக்காரனாக நின்ற தனது மகனை கண்டு கதறி அழுதார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், , எந்த ஒரு தீய பழக்கவழக்கமும் இல்லாத சிறுவன் தனியாக இந்த கொலையை செய்திருக்க இயலுமா ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

சிறுவன் போலீசாரிடம் ஒப்படைத்த ரத்தம் தோய்ந்த இரும்பு கம்பியை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அதில் இருவரின் கைரேகைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சிறுவனின் தந்தையை அழைத்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

சந்துரு, முலபாகிலு பகுதியில் புதிதாக வீடுகட்டி வருவதாகவும், கட்டுமான பணிகளை பார்வையிட சென்ற பின்னர், அவரது மனைவி நேத்ரா வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விடுவதையும் , சில நேரங்களில் அவர் திரும்பி வரும் வரை பள்ளி முடிந்து திரும்பும் அவர்களது மகன் வீட்டு வாசலிலேயே பசியுடன் காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. மனைவி எங்கே செல்கிறாள் ? என்று விசாரித்த போது நேத்ராவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் கடந்த உறவு இருப்பது தெரியவந்தது. மனைவியை சந்திரப்பா கண்டித்துள்ளார்.

இதையடுத்து நேத்ராவை தேடி ஆண் நண்பர் வீட்டுக்கே வரத்தொடங்கி உள்ளார். இதனை சிறுவன் பார்த்து விட்ட நிலையில், தாய் மீது வெறுப்பு மன நிலையில் இருந்துள்ளான். தாய் வீட்டில் உணவு தயாரிக்காமல் அந்த நபருடன் பேசியபடியே பொழுதை கழிப்பதாக தந்தையிடம் அந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளான்.

கடந்த இரண்டாம் தேதி ஏற்பட்ட தகராறில் மனைவி நேத்ராவை, சந்திரப்பா இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், அப்போது வெளியே அமர்ந்து படித்து கொண்டிருந்த மகனிடம், தாயை கொன்று விட்டதாக கூறி அழுததாகவும் கூறப்படுகின்றது.

அதற்கு அந்த சிறுவன், அப்பா கவலை படாதீங்க, இந்த கொலை பழியை நான் ஏற்று கொள்கிறேன், நான் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் அடைப்பாங்க. அங்கு நன்றாக கல்வியும் கற்று தருவார்கள். நன்னடத்தை அடிப்படையில் சில வருடங்களில் வெளியேவும் விட்டு விடுவர்' நீங்கள் கவலை படாதீங்க..! என்று ஆறுதல் கூறியுள்ளான். நான் அங்கிருந்து வெளியே வருவதற்குள் நீங்கள் நன்றாக சம்பாதித்து வைங்க... என்று சொல்லி, கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியை எடுத்துச்சென்று சடலமாக கிடந்த தாய் நேத்ராவை மீண்டும் தாக்கி விட்டு, தந்தையை ஊருக்கு செல்லுமாறு கூறியதாகவும், சில மணி நேரங்கள் கழித்து சிறுவன் காவல் நிலையம் சென்று சரணடைந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மனைவி கொலை வழக்கில் சந்திரப்பாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.