பஞ்சுமிட்டாயா ?.. நஞ்சு மிட்டாயா ?.. சென்னையில் ரெய்டு.. மக்களே உஷார்.. சாப்பிட்டவங்க செய்ய வேண்டியது என்ன ?
Published : Feb 09, 2024 6:40 AM
பஞ்சுமிட்டாயா ?.. நஞ்சு மிட்டாயா ?.. சென்னையில் ரெய்டு.. மக்களே உஷார்.. சாப்பிட்டவங்க செய்ய வேண்டியது என்ன ?
Feb 09, 2024 6:40 AM
பஞ்சுமிட்டாயில் சேர்க்கப்படும் ரசாயன நிறமூட்டிகள் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், ஆபத்தான நிறமூட்டிகளை கண்டறிவது எப்படி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
கிட்ஸ் முதல் 90ஸ் கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் கண்கவர், தின்பண்டமான, பஞ்சுமிட்டாய் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கேன்சர் நோயை உண்டு செய்யும் என்ற புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை தெரிவித்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 10 ற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மெரினாவில் விற்பனை செய்த பஞ்சுமிட்டாயை ஆய்வு செய்த போது, கைகளில் பஞ்சுமிட்டாயின் நிறம் ஒட்டியது. விசாரித்ததில் சென்னை பாரிஸில் வாங்கிய நிறமூட்டிகளைக் கொண்டு தாங்களே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்ததாக கூறினர்.
இதனையடுத்து அனைத்து பஞ்சுமிட்டாய்களும் பறிமுதல் செய்து, அதன் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். விற்பனை செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர்.
உணவுப் பொருட்கள் பார்ப்போரை கவரவேண்டும் என்பதற்காகவே தொழிற்கூடங்களில் பயன்படுத்தப்படும் ரோடமைன் பி' (Rhodamine B) எனப்படும் வேதிப்பொருட்களை உணவில் கலக்கின்றனர் என்றும் இது பார்ப்பதற்கு அழகான நிறத்தை கொடுக்கும் ஆனால் அதை விட உயிருக்கு மிக பெரிய ஆபத்தான கேன்சர் நோயை கொடுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
ஒரு முறை அல்லது இருமுறை இதுமாதிரியான நிறமூட்டிகள் கலந்த பஞ்சுமிட்டாய் போன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால் சிறிய அளவிலான உடல் பாதிப்பு ஏற்படலாம். அதற்கான மருத்துவ சிகிச்சைகளும் உள்ளன. அதுவே தொடர்ந்து சாப்பிடும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சமயங்களில் கேன்சர் நோயைக் கூட ஏற்படுத்தும் என்கின்றனர்...
பஞ்சுமிட்டாய் மட்டுமில்லாமல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், காய்கறிகளில் கூட நிறமூட்டிகள் கலக்கப்படுகிறது என்றும், எனவே நிறமூட்டிகள் இல்லாத உணவை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.