லிப்ஸ்டிக் அரசு பஸ்சுக்குள் திடீர் ஓட்டை... கீழே விழுந்த பெண் பயணி.. பரபரப்பு காட்சிகள்..! உயிருக்கு உத்தரவாதம் இல்லையோ..
Published : Feb 06, 2024 8:07 PM
லிப்ஸ்டிக் அரசு பஸ்சுக்குள் திடீர் ஓட்டை... கீழே விழுந்த பெண் பயணி.. பரபரப்பு காட்சிகள்..! உயிருக்கு உத்தரவாதம் இல்லையோ..
Feb 06, 2024 8:07 PM
சென்னை அமைந்தகரை அருகே ஓடிக் கொண்டிருந்த மாநகர பேருந்தின் தரைப் பலகை உடைந்து ஓட்டையான நிலையில், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் அந்த துவாரத்தின் வழியாக சாலையில் விழுந்த விபரீதம் அரங்கேறி உள்ளது.
பெண் பயணி கீழே விழக்காரணாமாக இருந்த ஓட்டை உடைசலான சென்னை மாநகர பேருந்து இது தான்..! பெண்களுக்கான இலவச பேருந்து என்பதை அடையாளம் காண வசதியாக, உதட்டில் பூசப்படும் லிப்ஸ்டிக் போல முன் பகுதியில் மட்டும் பிங்க் வர்ணம் பூசப்பட்டிருப்பதால் இதனை லிப்ஸ்டிக் அரசு பஸ் என்றும் அழைக்கின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான தடம் எண் 59-ஐக் கொண்ட பேருந்து ஒன்று திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அடுத்தடுத்து வேகத்தடைகள் வந்த போதிலும் பேருந்தின் ஓட்டுனர் வேகத்தை குறைக்காமல் பேருந்தை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளால் சீட்டில் நிலையாக அமர இயலவில்லை என்றும் தூக்கித் தூக்கி போட்டதாகவும் கூறப்படுகின்றது.
என்.எஸ்.கே நகர் சிக்னலை கடந்த போது வந்த வேகத்தைடையில் பேருந்து ஏறி இறங்கிய நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரின் கால் மாட்டில் இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. அந்த ஓட்டை வழியாக இருக்கையில் இருந்து சறுக்கி பெண் பயணி கீழே விழுந்தார்.
அவர் முழுவதுமாக வெளியே விழாமல் சாலையில் கால்கள் உரச தொங்கிய படியே செல்வதை பார்த்து சக பயணிகள் சத்தமிட்டதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பெண் பயணி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
பெண் பயணிக்கு தண்ணீர் கொடுத்து அசுவாசப்படுத்திய மற்ற வாகன ஓட்டிகள், பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் கேள்விகளால் துளைத்தெடுக்க, அடுத்தடுத்த வேகத்தடையால் இப்படி நிகழ்ந்து விட்டதாக பேருந்து ஓட்டுனர் தெரிவித்தார்.
பணிமனையில் இருந்து பேருந்தை எடுத்து வரும் போது ஒழுங்காக இருக்கின்றதா ? என்பதை எல்லாம் பார்க்க மாட்டீர்களா ? என்று ஒருவர் கேள்வி எழுப்ப, இங்க பாருங்க இப்பதான் பேருந்து பலகை உடைந்து விழுந்துருக்கு முன் கூட்டியே நாங்க என்ன பண்ணமுடியும் என்றார் நடத்துனர்
காயம் ஏற்பட்ட அந்த பெண் பயணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பேருந்தை முறையாக பராமரிக்க தவறியதாக பேசின் பிரிட்ஜ் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர், தொழில்நுட்ப பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டை உடைசலான அரசு பேருந்துகளை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்குவதற்கு அரசு போக்குவரத்து கழகம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் நகரின் முக்கிய சாலைகளில் இயக்கப்படும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.