திமுகவில் விஜய் கட்சியின் ‘ஸ்லீப்பர் செல்’ பில்லா ஜெகன் தேர்தல் அறிக்கைக்கு ஆலோசனை..!
Published : Feb 06, 2024 6:49 AM
திமுகவில் விஜய் கட்சியின் ‘ஸ்லீப்பர் செல்’ பில்லா ஜெகன் தேர்தல் அறிக்கைக்கு ஆலோசனை..!
Feb 06, 2024 6:49 AM
விஜய்யை அழைத்து நெல்லையில் நிவாரண உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தின் தென்மண்டலப் பொறுப்பாளர் பில்லா ஜெகன், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ரஜினி மற்றும் அஜீத் நடித்த பில்லா படத்தின் பெயரை தனது பெயரின் முன்பகுதியில் சேர்த்துக்கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் தென் மண்டல பொறுப்பாளராக வலம் வருபவர் பில்லா ஜெகன்..!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நெல்லையில் வைத்து நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பில்லா ஜெகன், அப்போது வேன்களில் விஜய் மக்கள் இயக்கத்தினரை நெல்லைக்கு அழைத்துச்சென்று விஜய்யிடம் நல்ல பெயர் பெற்றார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள விஜய் தினமும் ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களின் எழுச்சியை காண்பித்து வருகிறார்
விஜய் தனது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து வரும் நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்த மறுநாள், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , திருச்செந்தூரில் நடத்திய சத்ரு சம்ஹார யாகத்திலும் பில்லா ஜெகன் கலந்து கொண்டதாக படங்கள் வெளியானது
தூத்துக்குடியில் கனிமொழி தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் பில்லா ஜெகன் பங்கேற்றார்.
ஒரே நேரத்தில் திமுக, தவெக என இரு அரசியல் இயக்கங்களிலும் பில்லா ஜெகன் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது விசுவாசம் கொண்டவரான பில்லா ஜெகன் திமுகவை விட்டு விலகவும் முடியாமல், விஜய்யின் புதிய கட்சி பணிகளை தொடங்கவும் இயலாமல் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர், எங்களோட ஸ்லீப்பர் செல்லே அண்ணன் பில்லா ஜெகன் தான், எங்களுக்கு எதிரான அரசியல் விளையாட்டுக்களை முன் கூட்டியே அறிந்து எங்களை வழி நடத்துகிறார் என்றனர். இது தொடர்பாக விளக்கம் கேட்க பில்லா ஜெகனை தொடர்பு கொண்ட போது என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.. என்ற அவரது செல்போன் ரிக்டோன் சொன்ன பதிலை கூட கூற மனமில்லாமல் பின்னர் பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்தார்.