எந்த கொம்பன் வந்தாலும் என்னை மீறி செய்ய முடியாது.. பள்ளிக்கூடத்தில் பஞ்சாயத்து ..! திமுக பஞ்.தலைவி கணவரின் வீடியோ
Published : Feb 05, 2024 7:52 PM
எந்த கொம்பன் வந்தாலும் என்னை மீறி செய்ய முடியாது.. பள்ளிக்கூடத்தில் பஞ்சாயத்து ..! திமுக பஞ்.தலைவி கணவரின் வீடியோ
Feb 05, 2024 7:52 PM
ஓமலூர் அரசு பள்ளியில் கழிவறை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் தனக்கு தரவில்லை என்பதற்காக , அங்கே வேலை செய்து வந்த கட்டிட ஒப்பந்ததாரரை மறித்த திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர், தன்னை மீறி எந்த கொம்பனும் வேலை செய்ய முடியாது என்று மிரட்டிச்சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தன்னை மீறி எந்த கொம்பனும் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்ய முடியாது என்று மிரட்டியதாக புகாருக்குள்ளாகி இருக்கும் திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர் ராமச்சந்திரன் இவர் தான்..!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 400மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அங்கு கழிவறை கட்டுமான பணிக்கு 6 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது.
இதற்காண ஒப்பந்த பணியை தேக்கம்பட்டி உதயநிதி ரசிகர் மன்ற துணை தலைவரான நடராஜன் செய்து வந்தார்.
சுமார் 300 சதுர அடியில் 4 கழிப்பறை கட்டும் பணி தொடங்கி நடந்து வந்த நிலையில் பள்ளிக்கு சென்ற வெள்ளாளபட்டி திமுக பஞ்சாயத்து தலைவி சியாமளா தேவியின் கணவர் ராமச்சந்திரன், தனது ஊரில் உள்ள பள்ளி வேலையை வெளியூரை சேர்ந்தவருக்கு கொடுத்தது ஏன் கேட்டு தகராறு செய்ததாகவும், 6 லட்சம் ரூபாய்க்கு கான்கிரீட்டில் கட்ட வேண்டிய கழிவறையை ஆஸ்பெட்டாஸ் சீட் வைத்து கட்டுவது எப்படி சரியாக இருக்கும் ?என்று கேட்டு வேலையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகின்றது.
இரு தரப்பையும் அழைத்து தலைமை ஆசிரியை சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போது, தன்னை மீறி எந்த கொம்பனும் இந்த கழிவறையை கட்ட முடியாது என்று அவர் மிரட்டி விட்டு சென்றதாக வீடியோ ஒன்று வெளியானது
இதனால் நொந்து போன தலைமை ஆசிரியை, ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு, இருவரும் சண்டை போடாமா யாராவது ஒருத்தர் கட்டிக் கொடுங்கப்பா ... என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார்
பள்ளிக்கூடத்தில் கழிவறை ஒப்பந்தம் கேட்டு மிரட்டியதாக பரவிய அந்த வீடியோ குறித்து ராமச்சந்திரனிடம் கேட்ட போது, தான் யாரையும் மிரட்டவில்லை என்றும் தனது ஊர் பள்ளிக்கு தரமான கழிவறை கட்டிக் கொடுக்க வேண் டும் என்ற நோக்கிலேயே அப்படி பேசியதாகவும், தற்போது அந்த கழிவறையை தான் தரமாக கட்டிவருவதாகவும் விளக்கம் அளித்தார்
கழிவறை ஒப்பந்தம் தொடர்பாக உதயநிதி மன்ற நிர்வாகியும், திமுக பிரமுகரும் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது