திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 25-ஆம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த அவர், பிரதமர் பங்கேற்கும் விழா 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் மாபெரும் எழுச்சி மாநாடாக நடைபெறும் என்றார்.
தேர்தல் பிரசாரத்திற்கு தென் தமிழகத்துக்கு பிரதமர் வர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
அ.தி.மு.க.விடம் பேசச் சொல்லி ஜி.கே. வாசனை தாங்கள் அனுப்பவில்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, நட்பு அடிப்படையில் இன்னொரு கட்சியுடன் ஜி.கே.வாசன் பேசுவதை தாங்கள் எப்படி தடுக்க முடியும் என்று வினவினார்.
பிராண பிரதிஷ்டையில் பிரதமர் பங்கேற்றதால் சங்கராச்சாரியார்கள் செல்லவில்லை என அமைச்சர் உதயநிதி பேசியதை குறிப்பிட்ட அண்ணாமலை, சங்கராச்சாரியார்கள் மீது உண்மையிலேயே பாசம் இருந்தால் தமிழகத்தில் நடக்கும் குடமுழுக்கு விழாக்களுக்கு அவர்களை ஏன் அழைப்பதில்லை என வினவினார்.