12 வருஷமாக மனைவியை வீட்டுக்குள் அடைத்து கதவுக்கு மூன்று பூட்டு போட்ட கணவன்..! கதவை உடைத்து மீட்ட காட்சிகள்
Published : Feb 03, 2024 6:23 AM
12 வருஷமாக மனைவியை வீட்டுக்குள் அடைத்து கதவுக்கு மூன்று பூட்டு போட்ட கணவன்..! கதவை உடைத்து மீட்ட காட்சிகள்
Feb 03, 2024 6:23 AM
மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் 12 வருடங்களாக அவரை வீட்டிற்குள் அடைத்து மூன்று பூட்டு போட்டு பூட்டிச்செல்வதை கணவன் வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், அடைப்பட்டு கிடந்த பெண்ணையும் , சிறுமியையும் கதவை உடைத்து காவல்துறையினர் அதிரடியாக மீட்டனர்
பரிதவிப்புடன் பூட்டிய வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்ட பெண்..! வீட்டின் கதவில் வெளிப்பக்கமாக இரட்டை பூட்டு போட்டு பூட்டிச் சென்ற சந்தேக கணவன்... 12 ஆண்டுகளாக வெளி உலகத்தையே பார்க்கவிடாமல் அடைத்து வைக்கப்பட்ட பெண் மற்றும் சிறுமி மீட்கப்பட்ட காட்சிகள் தான் இவை..!
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட் தாலுகாவில் உள்ள எச்.மடகேரே கிராமத்தை சேர்ந்த சுனாலயா சுமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட மனைவி அழகாக இருந்ததால் மனைவியை வேறு யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து குடித்தனம் நடத்திவந்துள்ளார். இரு குழந்தைகள் பிறந்த நிலையில் தான் வெளியே சென்ற பிறகு மனைவி அக்கம் பக்கத்து விட்டாரிடம் பேசும் தகவல் அறிந்து, வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் பலகை கொண்டு முழுவதுமாக அடைத்து விட்டு வெளிக்கதவை மூன்று பூட்டு போட்டு பூட்டிச்செல்வதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது
இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் சுமா அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் கழிவறை என்பதே கிடையாது. வீட்டிற்கு வெளியே தான் கழிவறை உள்ளது. கணவன் வாளி ஒன்றை கொடுத்து அதில் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள செய்துள்ளான். நள்ளிரவில் அவன் திரும்பியவுடன் வாளியில் உள்ள கழிவுகளை அவனே எடுத்துச்சென்று வெளியே கொட்டுவதையும் வாடிக்கையாக்கி உள்ளான்.
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மகளை, தாயுடன் வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு மூத்த மகனை மட்டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார். அக்கம் பக்கத்தில் கூலி வேலை செய்து வரும் சுனாலயா இரவில் சுமார் 11 அல்லது 12 மணிக்கு தான் வீடு திரும்புவார் என்றும் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் மகன், தந்தை வரும் வரை வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த கொடுமையும் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது.
அக்கம் பக்கத்து வீட்டார் மூலம் தகவல் கிடைத்ததும் சித்தப்பாஜி என்ற வழக்கறிஞர் சப்-இன்ஸ்பெக்டர் சுபன் மற்றும் இதர அதிகாரிகள் பெண் அடைக்கப்பட்டிருந்த பூட்டு மற்றும் கதவை உடைத்து சோதனை நடத்தினர். இதில் ஜன்னலை உடைத்ததும் உள்ளே இருந்து பெண் பதற்றத்துடன் உதவி கேட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இரண்டு குழந்தைகளையும் அதிகாரிகள் மீட்டனர்.
சுமாவிடம் விசாரணை நடத்திய போது கடந்த 12 ஆண்டுகளாக கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வீட்டுக்குள் அடைத்து வைத்து செல்வதை வாடிக்கையாக்கியதாக தெரிவித்தார்
சுனலயாவுக்கு மூன்று மனைவிகள் என்றும் முதல் இரண்டு மனைவிகளும் அவரது சித்திரவதை தாங்காமல் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 வது மனைவி சுமாவை அவரது தாய் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சுனலயாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.