​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அய்யோ அம்புட்டும் போச்சே.. புது வீடு மொத்தமாய் சரிந்தது காரணம் இவர் தானாம்..! கண்ணீர் விட்டு கதறி அழுத சோகம்

Published : Jan 23, 2024 6:27 AM



அய்யோ அம்புட்டும் போச்சே.. புது வீடு மொத்தமாய் சரிந்தது காரணம் இவர் தானாம்..! கண்ணீர் விட்டு கதறி அழுத சோகம்

Jan 23, 2024 6:27 AM

புதுச்சேரியில் புதிதாக கட்டி முடித்த 4 மாடி கட்டிடம் புதுமனை புகுவிழா நடத்துவதற்கு முன்பாக மொத்த வீடும் சாய்ந்து விழுந்த சோகம் அரங்கேறி இருக்கின்றது.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா நிலத்தில் 4 மாடி வீடு கட்டினார், இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்,

இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்க்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டிற்கு முன்பாக வாய்க்காலை அகலப்படுத்தி சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது, இதனால் புதிதாக கட்டப்பட்ட 4 தளங்களை கொண்ட வீடு லேசாக சாய்ந்ததாகவும், அதிர்ச்சி அடைந்த சாவித்திரி இது தொடர்பாக வாய்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் காலை முதலே வீடு மிக மோசமாக சாய்ந்து கொண்டே சென்றதை கண்டு சாவித்ரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்திருப்பதாக கூறி பேசி கொண்டிருந்த போது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அருகே ஒட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. வீட்டை மொத்தமாக பறிகொடுத்துவிட்டு வீதியில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

அழுது மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்சென்று சாலையோரம் கிடத்தினர்

நான்கு தளங்களைக் கொண்ட கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் , இடிந்து போன வீடு அதிக உயரத்தில் தரமின்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா ? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா ? என தெரியவரும் என தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரரின் முன் எச்சரிக்கை இல்லாத செயலால் இந்த வீடு இடிந்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கூறி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் குற்றஞ்சாட்டினார்