உலகிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி தாம் தான் என்று உணருவதாக ராம் லல்லா சிலையை வடிவமைத்த கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் கூறினார்.
பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், சில நேரங்களில் கனவு உலகில் இருப்பதைப் போல தாம் உணருவதாகவும் தெரிவித்தார்.
குடும்பத்தினர் உள்ளிட்ட யாரிடமும் பேசாமல் கடுமையாக பணியாற்றி குழந்தை ராமரை உருவாக்கியதற்கு பலன் கிடைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
எம்.பி.ஏ. பட்டதாரியான அருண், கார்ப்பரேட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு தமக்குப் பிடித்தமான சிற்பம் வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர். அவரது தந்தை, தாத்தா ஆகியோரும் சிற்பிகளாவர்.
இதற்கு முன் டெல்லி இந்தியா கேட்டில் உள்ள 20 அடி உயர சுபாஷ் சந்திர போஸ், கேதர்நாத்தில் உள்ள 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் போன்ற சிலைகளை அருண் யோகிராஜ் வடித்துள்ளார்.