உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 57 ஆயிரத்து 400 சதுர அடியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண, அயோத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
திரேதா யுகத்தில் அயோத்தியில் அன்னை கௌசல்யா மற்றும் தசரதன் ஆகியோருக்கு பிறந்தவர்தான் ஸ்ரீராமர். அவர் நவமி நாளில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில், பக்தர்கள் “ராம நவமி” என்று சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ராமபிரான் பிறந்த மண்ணான அயோத்தியில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளைக் கொண்டதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரமும் கொண்ட இக்கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டவை. 392 தூண்கள், 12 கதவுகள் உள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பார் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குத் திசையிலிருந்து 32 படிக்கட்டுகள் ஏறி, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்காக சாய்வுதளம், மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் 732 மீட்டர் நீளம், 14 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் அருகே வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால கிணறு ஒன்றும் உள்ளது. 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் மண்டபம் ஒன்றும் அங்கு மருத்துவம் மற்றும் லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.
சரியாக நண்பகல் 12.20 மணிக்கு பால ராமரை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். ஒட்டுமொத்த நகரமுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.