உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நடைபெறவுள்ள பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள், நகரில் குவிந்து வருகின்றனர்.
நாளை பகல் 12.20 மணியளவில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பி
ராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ராமர் உருவம் கொண்ட பதாகைகள் அமைக்கப்பட்டு மின்ஒளி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை வழங்கி வருகின்றனர்.
400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி, அலிகாரில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய இந்த பூட்டு, இந்து மகா சபா சார்பில் ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அயோத்தி கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டு, சிலையின் கண்கள், துணியால் மூடப்பட்டுள்ளன. திறப்பு விழா நாளில் இந்த துணி அகற்றப்பட்டு, பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடத்தப்படும்.