​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரங்கநாதரையும் ராமநாதரையும் வழிபட்ட பிரதமர் மோடி..! புனித நீராடி பிரார்த்தனை..!!

Published : Jan 20, 2024 8:58 PM



ரங்கநாதரையும் ராமநாதரையும் வழிபட்ட பிரதமர் மோடி..! புனித நீராடி பிரார்த்தனை..!!

Jan 20, 2024 8:58 PM

திருச்சி மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ராமாயண பாரணத்தை கேட்டு பிரார்த்தனை மேற்கொண்டார்.

சென்னையிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கொள்ளிடக் கரையை அடைந்தார். சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயில் நோக்கி சென்ற பிரதமருக்கு இரு மருங்கிலும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். காரின் கதவோரம் நின்றபடி கையசைத்து வரவேற்பை ஏற்றார் பிரதமர்.

பட்டு வேட்டி, துண்டுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் வழிபாடு செய்த பிரதமர், காயத்ரி மண்டபத்தில் நின்று ரங்கநாதரை தரிசித்தார்.

கோயில் பிரகாரத்தில் யானை ஆண்டாளுக்கு பிரதமர் பழங்களை வழங்க, ஆண்டாள் மவுத் ஆர்கன் வாசித்து பிரதமருக்கு ஆசி வழங்கியது.

கம்பர் மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தையும் பிரதமர் கேட்டு ரசித்தார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர், சாலை மார்க்கமாக ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்றார். இங்கும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக பிரதமருக்கு மலர் தூவி வரவேற்பளித்தனர்.

ராமேஸ்வரத்தில் முதல் நிகழ்ச்சியாக அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்தபடி பேட்டரி வாகனத்தில் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர், இங்குள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடினார்.

கோயில் பிரகாரத்தில் வலம் வந்து ஒவ்வொரு சன்னதியாக வழிபாடு செய்த பிரதமருக்கு, மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ராமர் அயோத்தி திரும்பிய கதையை சமஸ்கிருதம், காஷ்மீரி, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளில் இசைக்குழுவினர் விவரித்ததை பிரதமர் கேட்டு ரசித்தார்.

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்கியுள்ள பிரதமர், ஞாயிறு காலை அரிச்சல் முனையிலும், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடி கோதண்ட ராமர் ஆலயத்திலும் வழிபாடு நடத்த உள்ளார்.