​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

Published : Jan 20, 2024 11:50 AM



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

Jan 20, 2024 11:50 AM

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆலய தரிசன பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.

சென்னையிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து கொள்ளிடக்கரை வரை ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார்.

காரில் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள் வரவேற்பளித்தனர். காரில் நின்றபடி வழிநெடுகிலும் காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து வரவேற்பை பிரதமர் ஏற்றார்.

பின்னர், பட்டு வேட்டி, துண்டு போர்த்தியபடி ரங்கநாத சுவாமி கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

ரங்கநாத சுவாமி கோயிலில் கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் கோயில்களில் வழிபாடு செய்த பிரதமர், காயத்ரி மண்டபத்தில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தார்.

கோயில் பிரகாரத்தில் வலம் வந்த பிரதமர், யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கினார். பிரதமரை தும்பிக்கையால் ஆசி வழங்கிய யானை, மெளத் ஆர்கான் இசைக்கருவியை வாசித்ததை கண்டு ரசித்தார்.

பின்னர், உற்சவர் நம்பெருமாளை வழிபட்ட பிரதமருக்கு ஜடாரி வைத்து அர்ச்சகர்கள் ஆசி வழங்கினர்.

தரிசனத்தை முடித்தபின் கம்பர் மண்டபத்தில் அமர்ந்து கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் அங்கு உள்ள ராமநாதஸ்வாமி கோவிலில் வழிபாடு செய்வதுடன், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 22 புனித தீர்த்தங்களை பெற்றுக்கொள்கிறார்.