​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவாகரத்து கவுன்சிலிங்கில் கலாட்டா.. மாமியார் மருமகள் சண்டை உருண்டு புரண்டு தாக்குதல் ..!

Published : Jan 20, 2024 7:00 AM



விவாகரத்து கவுன்சிலிங்கில் கலாட்டா.. மாமியார் மருமகள் சண்டை உருண்டு புரண்டு தாக்குதல் ..!

Jan 20, 2024 7:00 AM

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ள நிலையில் சமாதானம் பேச கணவன் வீட்டுக்கு சென்ற இடத்தில் ஒருவருக்கொருவர் சுடு சொல் பேசியதால் மருமகளும், மாமியாரும் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சரத்குமார் இவர் வேங்கடலட்சுமி என்ற மென் பொறியாளரை, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 10 வது நாள் சரத்குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழந்த நிலையில் தனது கணவரின் மரணத்திற்கு மருமகளின் ராசி தான் காரணம் என்று மாமியார் சண்டையிட்டதால் தகராறு நீண்டது.

சில தினங்களிலேயே இருவரும் கருத்துவேறுபாடால் பிரிந்து சென்ற நிலையில், வேங்கட லட்சுமி , கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட மறுத்த சரத்குமார். தனக்கு திருமண செலவுக்காக 20 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே விவாகரத்து தருவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் வியாழக்கிழமை கணவன் வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டார் வேங்கட லட்சுமி. அவருடன் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்க மகளிர் அமைப்பு நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

தனது மனைவியை பட்டுசேலைகளைக் கிழித்து சேதப்படுத்தியதாக

சரத்குமார் புகார் தெரிவிக்க, அவர்களே செய்து விட்டு தன் மீது பழி போடுவதாக அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று விட்டு , தங்களுக்கு சேர வேண்டியதை கொடுத்து விட்டு வீட்டுக்குள் வா.. என்று மாமியார் கூற , மருமகளும் பதிலுக்கு பதில் பேசிய நிலையில் அருகில் இருந்த கணவன், மாமனாரை அவதூறாக பேசியதால் கைகலப்பு ஏற்பட்டது.

ஒரு பக்கம் சரத்குமாரும் பெண்ணின் தம்பியும் மோதிக் கொள்ள, மறு பக்கம் மாமியாரும் மருமகளும் தலைமுடியை பிடித்துக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்

இந்த தாக்குதலில் தனக்கு கை விரல் முறிந்து விட்டதாக சரத்குமார் தெரிவித்த நிலையில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்று மாமியார் கலைச்செல்வி பதற்றம் தெரிவித்தார்.

திருமண செலவுக்கான 20 லட்சம் ரூபாயை திருப்பி கேட்கின்றனர், திருமணத்துக்கு முன்பு இருந்தது போல என்னை திருப்பி தர முடியுமா ? என்று கேள்வி எழுப்பி உள்ள வேங்கட லட்சுமி, சமாதானம் பேச சென்ற தன்னை அடித்து விரட்டிய கணவன் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

குடும்ப பிரச்சனைகள் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தையின் போது, கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதனை விடுத்து இருதரப்பும் மாறி மாறி சுடு சொற்களை பேசினால் என்ன மாதிரியான அசம்பாவிதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.